தமிழகத்தில் வெப்ப சலனத்தை எதிர்கொள்ள எந்த செயல் திட்டத்தை எடுக்கவில்லை.. ஆனால் கோடை வெயில் காரணமாக முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்துடன் நேற்று காலை கொடைக்கானல் சென்றுள்ளார். பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுத்த முதலமைச்சர் இன்று மாலையில் பசுமை பள்ளத்தாக்கு அருகே இருக்கக்கூடிய கால் மைதானத்தில் சிறிது நேரம் கால்ப் விளையாடினார்.
இந்நிலையில் கோடை வெயில் காரணமாக முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருமங்கலம் தொகுதியில் நீர்மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத், இளநீர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்ப அலை அதிகமாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பசலனத்தால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர், குறிப்பாக 19 மாவட்டங்களில் வெப்ப அலை கடுமையாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், அரசு அந்த 19 மாவட்டங்களில் வெப்ப சலனத்தை எதிர்கொள்ள எந்த செயல் திட்டத்தை எடுக்கவில்லை, ஆனால் கோடை வெயில் காரணமாக முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று உள்ளார்.
இதுவரை இல்லாதவரை 2023ம் ஆண்டு கடுமையான வெப்பச்சலனம் அதிகமாக ஏற்பட்டது என்று ஐ.நா. சபையே கவலையை தெரிவித்துள்ளது. தற்போது இந்த ஆண்டும் அதை எதிர்கொள்ள அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக நான்கு நாள் முதல் எட்டு நாள் வரை தான் வெப்ப அலை வீசும். ஆனால் தற்பொழுது மாதம் முழுவதும் வீசுகிறது. குறிப்பாக இரவு நேரமும் இந்த தாக்கம் அதிகரித்து இருப்பதால் மக்கள் வேதனை அடைந்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் எல்லாம் வெயில் கொடுமையால் பாதிப்பு அடைந்து விடுகின்றனர். ஆனால் அவர்களை காப்பாற்ற எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும், அக்கறையும் அரசு செலுத்தவில்லை. குடிநீருக்கு மூலமாக திகழும் வைகை, முல்லைப் பெரியாறு போன்றவற்றின் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஆறுகளில் உரை கிணறு அமைத்து, அதன் மூலம் நீர் வழங்கப்படும். ஆனால் தற்போது மூல ஆதாரமாக இருக்கும் வைகையை வறண்டு இருப்பதால் தற்போது கூட்டுநீர்திட்டம் ஸ்தம்பித்து உள்ளது.. இதை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.