நாட்டில் சரியான எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய தகுதி மம்தா பானர்ஜிக்குதான் உள்ளது என்று சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். கடந்த முறை கிடைத்த 300 தொகுதிகளில் இருந்து 25 சீட்கள் குறைவாக 275 சீட்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். தமிழ்நாட்டில் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் ஜெயிக்கலாம். மற்ற வேட்பாளர்கள் பற்றி தெரியாது. தமிழ்நாட்டில் ஒரு சீட்டுக்கு மேல் கிடைக்குமா? என்பதை சொல்ல முடியாது.
யார் பிரதமராக இருப்பார்? என கட்சிக்குள் தேர்தல் நடக்கவில்லை. வேட்பாளர்கள் ஜெயித்து வந்த பின்தான் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்ய வேண்டும். கட்சி எம்.பிக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். பா.ஜனதா எம்.பி.க்கள் என்னை பிரதமராக இருக்க சொன்னால் ஏற்பேன். மோடிக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்துவிட்டது. இந்த முறை வேறு ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.
சீனா 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடத்தை எடுத்து விட்டது. அதை மறைத்துவிட்டனர். எந்த பெரிய நாடும் இந்தியாவுக்கு உதவியாக இல்லை. அமெரிக்காவும் எதிரியாகி விட்டது. மோடி என்ன சொல்கிறார்? என்பதை பார்க்க கூடாது. தேர்தல் அறிக்கையைத்தான் பார்க்க வேண்டும். சொந்த காலில் நின்று சீனாவை தோற்கடித்து வெளியேற்ற வேண்டும். அதுதான் முக்கியம். இது குறித்து தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. தமிழ்நாடு பா.ஜனதா தலைமையில் மாற்றம் வரவேண்டும். நாட்டில் சரியான எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய தகுதி மம்தா பானர்ஜிக்குதான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.