டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் பணி நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவு!

டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அம்மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா. விதிகளை மீறி ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறி பணிநீக்கம் செய்துள்ளார்.

ஆம் ஆத்மி அரசுக்கும் டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் தொடர் மோதல் நிலவிவரும் வேளையில், ஆளுநரின் பணிநீக்கம் உத்தரவு வெளிவந்துள்ளது. முன்னதாக, டெல்லி மகளிர் ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடைப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்துவந்தது. விசாரணை முடிவுகளின்படி, 40 பணியாளர்களே நியமிக்க சட்டம் இருக்கும் நிலையில், முறைகேடாக 223 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளதாகவும், கவர்னரின் ஒப்புதலின்றி நியமிக்கப்பட்ட இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்படுகிறது என்றும் ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க டெல்லி மகளிர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆளுநரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மலிவால் தான் இந்த 223 பணியிடங்களை நியமனம் செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து எம்.பி ஆவதற்கு முன்பாக 9 ஆண்டுகள் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தார் சுவாதி மலிவால்.

223 ஊழியர்களை நியமிக்கும்போதே டெல்லி அரசின் நிதித் துறை ஒப்புதலை பெற்று இந்த நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டும் முறைகேடாக அவர் நியமனங்களை மேற்கொண்டார் என்று விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது. எனினும், ஆம் ஆத்மி கட்சியும் சுவாதி மலிவாலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.