பத்திரிகை தர்மத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்: செங்கோட்டையன்!

அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இந்நிலையில், உட்கட்சி மோதலால் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையபோவதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கி இருக்கிறார் செங்கோட்டையன்.

அதிமுக கட்சியின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த காலம் முதல் அதிமுக கட்சியிலேயே இருந்துவருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறியவராக இருந்தவர் செங்கோட்டையன். அதிமுகவின் அமைச்சரவையில், போக்குவரத்து, பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சராக இருந்திருக்கிறார் செங்கோட்டையன். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது அடுத்த முதலமைச்சர் என இவரது பெயரே கட்சி வட்டாரத்தில் இடம்பெற்றது. இந்நிலையில், அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் மனமுடைந்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாகவும் செய்திகள் வெளியாகியது. அதுமட்டுமல்லாது, தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தால் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய செங்கோட்டையன் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பரவிவரும் இந்த செய்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

45 ஆண்டு காலமாக அரசியலில் எந்த ஒரு அரசியல் கட்சினரும் சிறு குற்றம்கூட சொல்லமுடியாத அளவிற்கு எனது அரசியல் பயணம் நேர்மையாக தொடர்ந்து வருகிறது. ஆனால் என்னைப்பற்றி அவதூறாகவும் சற்றும் உண்மையில்லாத வகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி குறித்து பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டு தெளிவுப்படுத்தி இருக்க வேண்டும்..

இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை தாங்களாகவே வெளியிடுவது பத்திரிகை தர்மம் இல்லை.. இது போன்ற உணமைக்கு புறம்பான செய்தியை வெளிட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.. எதிர்காலத்தில் இது போன்ற ஆதாரமில்லாத செய்திகளை பத்திரிகை தர்மத்திற்கு எதிராக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.. இது கண்டனத்துக்குறியது.. இந்த செய்தியை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.