வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானத்திற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்: சீமான் அறிவிப்பு!

வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானத்திற்கு எதிராக வடலூரில் மே 4 கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன் அமைந்துள்ள பெருவெளியில் அரசு சார்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுகிரது. மேலும், பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் அரசின் செயல்பாட்டை விமர்சித்து அப்பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ள கூடாது என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி வரும் மே 4ஆம் வடலூரில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்போவதாக சீமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதைக் கண்டித்தும், மக்களின் எதிர்ப்பையும் மீறி அவசர அவசரமாக தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைளை முன்வைத்து தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவரும், தெய்வத்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் வருகின்ற 04-05-2024 சனிக்கிழமையன்று, மாலை 03 மணியளவில் வடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

தெய்வத்தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த பல்வேறு ஆளுமைகளுடன் நாம் தமிழர் கட்சி சார்பாக நானும் பங்கேற்று கண்டனவுரையாற்றவிருக்கும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தெய்வத்தமிழ்ப் பேரவை உறவுகளும், வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், வள்ளலார் வழி மெய்யன்பர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு பேரழைப்பு விடுக்கிறேன். பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.