இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 3 நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ளார். காத்மாண்டுவில் இன்று(மே. 4) நடைபெற்ற ’சிறார் நீதி நடைமுறை’ தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கில்’ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச அளவில் ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளார்.
சிறார் குற்றவியல் வழக்குகளில், நீதிமன்றங்கள் அனுதாபத்துடன் அணுக வேண்டும் என வலியுறுத்திய அவர், தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் சூழலில், சிறார்கள் பல்வேறு வகையான சைபர்-கிரைம் குற்றங்களில்(இணையவழி குற்றங்களில்) மூழ்கிவிடும் ஆபத்தும் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
இணையவழி தொழில்நுட்பங்கள் எளிதாக அணுகும் வகையில் இருப்பதால், இளம்பருவத்தினர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த டிஜிட்டல் யுகத்தில், இளம் பருவத்தினரை பாதுகாப்பதும் அவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதும் அவசியம். பெற்றோர் கண்காணிப்பு மிக முக்கியமென்பதையும் வலியுறுத்தி பேசியுள்ளார்.
இணையவழி குற்றங்கல் என்பவை நாடு, எல்லைகளைத் தாண்டி பரந்து விரிந்துள்ள குற்றச்செயல்களாகும். இந்த நிலையில், சிறார்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சர்வதேச அளவில் ஒத்துழைப்பு தேவை.
சிறார்களுக்கான குற்றச்செயல்களை விசாரிக்கும் நடைமுறைகளில், சிறார்களின் நலன்களும், உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை போதுமான திறன், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். சிறார் குற்றவியல் வழக்குகளில், சிறார்களின் குற்றங்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறதே தவிர அவர்களின் மறுவாழ்வு குறித்து யாரும் முன்னிலைப்படுத்துவதில்லை.
சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதில், சிறார்களுக்கான நீதி அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது.
சிறார்களின் நலனை முன்னிலைப்படுத்துவதன் மூலமும், அவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் ஆதரவை அளிப்பதன் மூலமும், சிறார்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும், மேம்பாடும் அடைவதற்கான சூழலை உருவாக்கிட சிறார்களுக்கான நீதி அமைப்பு உதவுகிறது என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.