பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது `நான் முதல்வன்’ திட்டம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தென்காசியைச் சேர்ந்த, பொருளாதார வசதியற்ற குடும்பத்தில் பிறந்தவர் இன்பா. இவர் வீட்டிலிருந்தவாறே குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகிவந்தார். இரண்டு முறை தேர்வெழுதி வெற்றி பெற முடியாத நிலையில், மூன்றாவது முறையில் வெற்றி பெற்று தற்போது தேசிய அளவில் 851-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் 3-வது முறை தேர்வுக்கான பயிற்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான `நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெற்று வந்தார். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் தேர்ச்சி பெற்றதையடுத்து, அரசு நூலகம், நான் முதல்வன் திட்ட ஸ்காலர்ஷிப் ஆகியவற்றால்தான் வெற்றி சாத்தியமானதாகத் தெரிவித்திருந்தார். இதுதவிர, கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவர் பிரசாந்த்தும் `நான் முதல்வன்’ திட்டம் தனது வெற்றிக்கு உதவியாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.
இதுதவிர, `நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள் சட்டக்கல்விக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் செய்தி வெளியானது. இவற்றை ஆதாரமாக காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘என் கனவுத் திட்டமாகத் தொடங்கி, பலரது கனவுகளை நனவாக்கி வரும் நான் முதல்வன்’’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.