முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் மகனும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை விடியோ எடுத்து வைத்து மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாகியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா வீட்டுக்கு பாதிக்கப்பட்ட பெண்களை வரவழைத்து, அவர்களிடம் விசாரணை நடத்தி சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் பதிவு செய்து வருகிறார்கள். ரேவண்ணாவின் வீட்டிலிருந்து கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது தொடர்ந்து பல பெண்களும், பெண்களின் சார்பாக அவர்களது மகன் உள்ளிட்டோரும் புகார் அளித்து வருகிறார்கள். அது தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் பதிவு செய்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடா்பாக சிறப்பு விசாரணைப் பிரிவு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், எச்.டி.ரேவண்ணாவை சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்காக இன்று கைது செய்துள்ளனர்.