டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஸேனா பரிந்துரை செய்துள்ளார். தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக குற்றம்சாட்டி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்ஐஏ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தேவேந்திர பால் புல்லரை விடுதலை செய்வதற்காக காலிஸ்தான் ஆதரவு குழுவான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பிடம் இருந்து 2014 – 2022 வரை ரூபாய் 134 கோடி பணம் பெற்றதாகவும், காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவான உணர்வுகளை தூண்டுவதாகவும் அகில இந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அஷூ மோங்கியா அளித்த புகாரின் அடிப்படையில் சக்சேனா இந்த பரிந்துரையைச் செய்துள்ளார். ‘சீக்கியர்களுக்கான நீதி’ அமைப்பிடம் இருந்து, அவர் நிதி பெற்றதாக உள்துறை அமைச்சகத்திற்கு உலக இந்து கூட்டமைப்பின் அஷூ மோங்கியா என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். பதவியில் இருக்கும் முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கடந்த ஒன்றரை மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தவாறே டெல்லி முதல்வராகப் பணியாற்றி வருகிறார் கெஜ்ரிவால். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது, 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஆளும் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், தற்போது என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.