வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அசாதாரணமான அணுகுமுறை குறித்து பின்வரும் கேள்விகளையும் சந்தேகங்களையும் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமர்ப்பிக்கிறோம்:
1. இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 மக்களவைக்கான முதல் 2 கட்டத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகளை 2024 ஏப்ரல் 30 அன்றுதான் வெளியிட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவின் (19 ஏப்ரல் 2024) தரவுகள் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் தரவுகள் (26 ஏப்ரல் 2024) 4 நாட்களுக்குப் பிறகுதான் வெளியாயின. இது சம்பந்தமாக, தேர்தல் ஆணையத்திடம் எங்களின் முதல் கேள்வி: வாக்காளர்களின் வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் இவ்வளவு தாமதம் செய்தது ஏன்?
2. முந்தைய சந்தர்ப்பங்களில், வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு விவரங்களை ஆணையம் வெளியிட்டது. இப்போது ஏன் இந்த மாற்றம்? அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் பலமுறை கேள்வி எழுப்பிய போதிலும், தாமதத்தை நியாயப்படுத்துவதற்கான எந்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கத் தவறியது ஏன்? நாடு முழுவதும் பதிவான வாக்குகளை சில மணி நேரத்தில் எண்ணி முடிக்க முடியும் என்ற நிலையில், முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சாவடி வாரியான எண்களை ஏன் கொடுக்க முடியவில்லை?
3. 19.04.2024 அன்று மாலை 7 மணி நிலவரப்படி முதல் கட்ட வாக்குப் பதிவில் (102 இடங்கள்) பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 60% என்று ஆணையம் கூறியது, அதேபோல இரண்டாம் கட்டத்தில் (88 இடங்கள்) மதிப்பிடப்பட்ட வாக்குப்பதிவு சுமார் 60.96%. ஆக இருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன. 20.04.2024 அன்று, ஆணையத்தின் கணிக்கப்பட்ட முதல் கட்ட வாக்குப்பதிவு 65.5% ஆகவும், 27.04.2024 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 66.7% ஆகவும் இல்லாதது ஏன்?
இறுதியாக, 30.04.2024 அன்று, புள்ளிவிவரங்கள் முதல் கட்டத்திற்கு 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு 66.71% என உறுதிப்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவு வெளியானபோதும் அது சதவீதத்தில்தான் கொடுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை வாக்காளர்களின் எண்ணிக்கையை சரியாகக் காட்டுகிறதா என்ற அச்சம். இந்தத் தாமதம் மற்றும் அறிக்கையிடல் வடிவத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.
4. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்பது இதுதான்: முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நாளிலிருந்து (19.04.2024 அன்று மாலை 7 மணிக்கு) வாக்குப்பதிவு தாமதமாக வெளியிடப்பட்டதில் இருந்து ஏன் 5.5% அதிகரித்தது? இரண்டாம் கட்டமாக, வாக்குப்பதிவு முடிவடைந்த நாளிலிருந்து (26.04.2024 )தரவுகள் தாமதமாக வெளியிடப்படுவதற்குள் (30.04.2024 ) இறுதி வாக்காளர் எண்ணிக்கை எப்படி 5.74% அதிகரித்துள்ளது?
5. இவ்வாறு தாமதம் செய்யப்பட்டது மட்டுமின்றி , தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகள், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் போன்ற முக்கியமான, இத்துடன் தொடர்புடைய புள்ளிவிவரங்களைக் குறிப்பிடவில்லை. வாக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் முக்கியப் புள்ளி விவரங்களுடன் வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்பட்டிருந்தால், வாக்குப்பதிவு அதிகரிப்பு (5%) அனைத்துத் தொகுதிகளிலும் நடந்ததா அல்லது ஆளும் கட்சி 2019 இல் சரியாக வாக்கு வாங்காத தொகுதிகளில் மட்டுமே இந்த வாக்கு அதிகரிப்பு காணப்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கும்.
6. பொது வெளியில் எழுந்துள்ள இந்த சந்தேகங்களைப் போக்க, தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தொகுதி (மற்றும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகள்) தரவுகளை வெளியிடுவதோடு, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களையும் வெளியிட வேண்டும். உண்மையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குச் சாவடியிலும் அரசியல் கட்சிகளால் ஏதேனும் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவற்றையும் குறிப்பிட வேண்டும். (நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில், வாக்குச் சாவடி மட்டத்தில் இப்படி புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.)
7. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தலைமை அதிகாரி ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சரியான வாக்காளர் எண்ணிக்கையைப் படிவம் 17C இல் பதிவு செய்கிறார். இதன் பொருள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கான வாக்களித்தோரின் எண்ணிக்கையின் தேவையான தரவுகள் ஆணையத்திடம் உள்ளன என்பதாகும். இப்போது தேர்தல் ஆணையத்திடம் நாம் கேட்கும் கேள்வி என்னவென்றால், வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களிடமும் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் இருப்பதாகக் கூறி பொறுப்பை வேட்பாளர்களிடம் மாற்றுவதற்குப் பதிலாக, மக்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் அதை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன தடை?
8. ஒரு தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், வாக்களித்தவர்களின் சரியான எண்ணிக்கை, வாக்காளர்களின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக பிரிப்பது போன்ற தகவல்களையும் தேர்தல் ஆணையம் வெளியிடாமல் தவிர்த்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இணையதளத்தில் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகியவை மட்டுமே காட்டப்பட்டுள்ளன. சட்டமன்றத் தொகுதிகள் அல்லது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான விவரங்கள் தொகுக்கப்படவில்லை. இந்த சூழலில், இந்த வெளிப்படையான குளறுபடிகளுக்கான காரணங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.
இறுதி முடிவுகளை மாற்றும் முயற்சி நடப்பதாக மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகத்தை நீக்குவதும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். எஞ்சிய கட்டங்களில் நடக்கும் தேர்தல்களின் வாக்குப்பதிவு விவரங்களை வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் படிவம் 17C இல் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.
தேர்தல் ஆணையம் தனது கடமையை நியாயமான முறையில் நிறைவேற்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கும் என்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.