கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
மக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்பட்டால் மக்கள் மின்னகத்தை தொடர்புகொண்டு மின் விநியோகம் சீரமைப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக மின் தேவை 20,830 மெகா வாட் ஆக அதிகரித்துள்ள நிலையில், மே மாத இறுதி இதுவரை அதிகளவு மின் நுகர்வு ஏற்பட்டாலும், அதை சமாளிக்க மின்சார வாரியம் தயாராக உள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், மின்இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களில் பழுதுஏற்பட்டுள்ளதால் மின்வாரியத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், பழுதடைந்த மீட்டர்களை மாற்ற மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 2லட்சத்து 25 ஆயிரத்து 632 மீட்டர்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தபழுதடைந்த மீட்டர்களால் துல்லியமான மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க முடிவதில்லை. இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அத்துடன், நுகர்வோருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, பழுதடைந்த மீட்டர் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைவிட அதிகமாக ரீடிங் காண்பித்தால் அதற்கான கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த நேரிடும். இதனால், அவர்களுக்கு நிதிச் சுமை ஏற்படும்.
இந்நிலையில், பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தெற்கு வட்டத்தில் மிகஅதிகபட்சமாக 36 ஆயிரத்து 343 மீட்டர்களும், குறைந்தபட்சமாக கரூர் வட்டத்தில் 3,400 மீட்டர்களும் பழுதடைந்துள்ளன. இதேபோல், சென்னை வடக்கு கோட்டத்தில் 22,093 மீட்டர்களும், கோவைவட்டத்தில் 7,089, ஈரோடு வட்டத்தில் 6,535, மதுரை வட்டத்தில் 23,023, திருச்சி வட்டத்தில் 22,880, திருநெல்வேலி வட்டத்தில் 27,716, வேலூர் வட்டத்தில் 25,463, விழுப்புரம்வட்டத்தில் 19,299, திருவண்ணாமலை வட்டத்தில் 12,465, தஞ்சாவூர் வட்டத்தில் 19,326மீட்டர்களும் பழுதடைந்துள்ளன. மேலும், எதிர்காலத்தில் மீட்டர் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க 20 லட்சம் மீட்டர்களை கொள்முதல் செய்ய அண்மையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.