“தமிழகத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் டெல்டாப் பகுதியில் 12 மணி நேரமும், பிற பகுதிகளில் 9 மணி நேரமும் மட்டும்தான் மும்முனை மின்சாரம் என்று இருந்த நிலையினை மாற்றி, உழவர்களின் நலனை எப்போதும் முதன்மையாக கருதக்கூடிய இந்த அரசு, கடந்த 2021-ல், பதவியேற்றது முதல் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம், நாள் ஒன்றுக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்பயனாக தமிழகத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான மும்முனை மின்சாரத்தின் நேரத்தினை நீட்டி வழங்கியதோடு மட்டுமல்லாமல், தமிழக விவசாய பெருமக்களின் பெருங்கனவாக இருந்து வந்த விவசாய மின் இணைப்பு உடனடியாக வழங்கிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக, கடந்த 2 ஆண்டுகளில், 1,50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு அளப்பரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டுக்கான விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மின்சார பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின்சார இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இம்மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் உள்ள உயரழுத்த மின் கட்டமைப்புகளில் அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படுகிறது. இத்தகைய இடையூறுகளை முற்றிலுமாக நிவர்த்தி செய்து, டெல்டா மாவட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இன்னும் அதிகப்படியான மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிட தேவையான அனைத்து மேம்பாட்டு பணிகளும், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் (Low Voltage) இடர்களைக் களையும் பொருட்டு, ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் ஜூலை 2021-ல் வகுக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 5,705 இடங்களில் உள்ள மின்மாற்றிகளில் மின்சுமை அதிகமாக உள்ளது எனவும், 3,200 இடங்களில் மின்மாற்றிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாகவும் மொத்தம் 8,905 மின்மாற்றிகளில் திருச்சி, நவலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் மின்மாற்றிகளின் மின்சுமை அதிகமாகவும், குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாகவும் தெரியவந்தது.
8,905 கூடுதல் மின்மாற்றிகள் நிறுவும் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டப் பணிகள் தமிழக முதல்வரால் ஆகஸ்ட் 2021-ல் தொடங்கி வைக்கப்பட்டது. வெவ்வேறு திறனுள்ள விநியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டு, மின்பளுக்கள் பகிர்வு செய்யப்பட்டு ரூ. 743.86 கோடி மதிப்பீட்டில் மின்கட்டமைப்புகள் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் 652 எம்.வி.ஏ கூடுதல் மின்திறன் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
அதிக மின்சுமையுள்ள 5,705 மின்மாற்றிகளில் மின்பளுக்கள் பகுப்பு செய்யப்பட்டதன் மூலம் அப்பகுதியிலுள்ள அனைத்து மின்மாற்றிகளிலும் இணைக்கப்பட்டுள்ள மின்பளுக்கள் அவற்றின் அனுமதிக்கப்பட்ட திறன் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு அனைவருக்கும் ஒரே சீராக தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்வதற்கு கூடுதலாக 3,200 புதிய மின்மாற்றிகள் நிறுவியதன் மூலம் தாழ்வழுத்த மின்பாதையின் நீளம் குறைந்து மின்னிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது, கிராமப்புறங்கள் உட்பட கடைமுனை நுகர்வோர் வரை அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது.
பொதுவாக, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான மின்சாரத்தினை வழங்குவதற்கென 24 மணி நேரமும் மும்முனையில் இயங்கக்கூடிய பிரத்யேகமான மின் பாதையின் வாயிலாக தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கடந்த மூன்று ஆண்டுகளாக, மின்சாரத் துறையில் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மின்னகத்தில் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்கள் கொண்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.