“இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து பல்வேறு அரசு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலையைத் தொடங்கும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இன்று வியாழக்கிழமை நாட்டின் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:-
தேர்தல் வெற்றி தன்னிடமிருந்து கைநழுவிப் போனதை உணர்ந்திருக்கும் பிரதமர் மோடி நமது கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யக்கூடும். அடுத்து அவர் பிரதமராக வர மாட்டார். அதனால் இன்னும் 4-5 நாட்களுக்கு அவர் நமது கவனத்தை திசைத் திரும்பும் முடிவெடுத்திருக்கலாம். அவர், சில நாடகங்களையோ வேறு சில வேலைகளையோ செய்யலாம். ஆனாலும் உங்கள் கவனம் சிதறி விடக் கூடாது.
வேலைவாய்ப்பின்மை மிகவும் முக்கியான பிரச்சனை. 2 கோடி வேலைகள் வழங்குவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய். அவர் பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி போன்றவற்றையே கொடுத்தார். மேலும், அதானி போன்றவர்களுக்கு சேவை செய்தார். நாங்கள் ‘பாரதி பரோசா திட்டத்தை’ கொண்டு வர இருக்கிறோம். இண்டியா கூட்டணி ஜூன் 4-ம் தேதி ஆட்சி அமைக்கும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதியிலிருந்து 30 லட்சம் பணியிடங்களை நிரப்பும் வேலையைத் தொடங்கும். ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.