கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்துச் சென்ற வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்மலா தேவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில் அருப்புக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கோரியும் நிர்மலா தேவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்து, மனு தொடர்பாக சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.