காங்கிரஸ் கட்சி தொழில் அதிபர்களிடம் இருந்து டெம்போவில் பணம் பெற்றதாக மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுத்து இருந்தால் அதானி மற்றும் அம்பானி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிடட்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தற்போது அதானி, அம்பானி பற்றி பேசுவது இல்லை என்றும் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டதாகவும் பிரதமர் மோடி விமர்சித்து பேசினர். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த பிறகு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் அறிக்கையை மோடி கவனித்து இருப்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆனால் அதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. திரித்து சொல்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய அரசியலில் மையப்புள்ளியாக மாறியிருப்பதை வரவேற்கிறோம். ஆனால், தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை படித்து புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளாமல் அவர் பேசுகிறார். பத்து ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகளை சொல்லாமல் ஜனாதிபதியினுடைய நிறத்தை சொல்லி, சிறுபான்மை மக்களை சிறுமைபடுத்துதல் போன்றவைகளைத்தான் அவர் செய்கிறார். இதை தவிர மற்றபடி 10 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்பது இதில் இருந்தே வெளிப்படையாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி அதானி, அம்பானியிடம் பணம் வாங்கியிருப்பதாக மோடி குற்றம்சாட்டியதாக கேட்கிறீர்கள்.. பெரிய குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார் மோடி. உடனடியாக அமலாக்கத்துறையை வைத்து அதானி, அம்பானியை விசாரித்து காங்கிரஸ் கட்சிக்கு டெம்போவிலே பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் யாராவது டெம்போவில் அதானி, அம்பானியிடம் பணம் வாங்கியிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகள் திமுக ஆட்சியை நிறைவு செய்துள்ளது. முதல்வரின் செயல்பாட்டை நான் பாராட்டுகிறேன். எல்லாருக்கும் உரிமைத்தொகை கொடுக்கிறாரே அது சிறந்த யுக்தி.. அது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இது தேர்தல் முடிவுகளிலும் வெளிப்படும். மோடி தைரியமாக இருக்க வேண்டியதுதானே.. பத்து வருடம் ஆட்சி செய்து விட்டார். அவர் செய்த சாதனைகளை செய்து மக்களிடம் வாக்கு கேட்க வேண்டியதுதானே.. காலையில் ஒன்று மதியம் ஒன்று என மழுப்பி டெம்போ, அதானி, அம்பானி அப்புறம் ஜனாதிபதியிடம் தோல் நிறம் என்றெல்லாம் ஏன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டியதுதானே. இவ்வாறு அவர் கூறினார்.