அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புங்கள்: ராகுல்!

காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார்.

நாட்டின் பிரபல தொழிலதிபர்களான அதானி, அம்பானி குறித்து வசைபாடி வந்த காங்கிரசும், ராகுல் காந்தியும், தற்போது அதை நிறுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். அவர்களிடம் இருந்து வேன் நிறைய கட்டுக்கட்டாக பணம் காங்கிரஸ் பெற்றுள்ளதா? என்பதை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பிரதமரின் இந்த உரைக்கு ராகுல் காந்தி நேற்று பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “மோடி ஜி, பயப்படுகிறீர்களா?. பொதுவாக பூட்டிய அறைகளில் தான் அதானி மற்றும் அம்பானியைப் பற்றி பேசுவீர்கள். பொதுவெளியில் அதானி மற்றும் அம்பானி பற்றி நீங்கள் பேசுவது இதுவே முதல்முறை. அவர்கள் இருவரும் காங்கிரஸுக்கு டெம்போக்களில் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும். இதில் உங்களுக்கு தனிப்பட்ட அனுபவம் எதுவும் இருக்கிறதா?. ஒரு காரியம் செய்யுங்கள். அதானியும், அம்பானியும் காங்கிரஸுக்கு டெம்போவில் பணம் அனுப்பினார்களா என்பதை அறிய சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை சோதனை நடத்துங்கள். பயப்பட வேண்டாம், மோடி ஜி.” என்று விமர்சித்துள்ளார்.

அதே வீடியோவில், “இதை மீண்டும் சொல்கிறேன். நரேந்திர மோடி அம்பானி மற்றும் அதானிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அதே அளவு இந்தியாவின் ஏழை மக்களுக்கு நாங்கள் கொடுப்போம். மகாலக்ஷ்மி யோஜனா, பெஹ்லி நௌக்ரி பக்கி திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்களை கோடீஸ்வரர்களாக்கும். பாஜகவினர் 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளனர். நாங்கள் கோடிக்கணக்கான மக்களை கோடீஸ்வரர்களாக உருவாக்குவோம்” என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.