மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் பேசி இருக்கிறார் பாஜக நிர்வாகி குஷ்பு.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 துவங்கி ஏப்ரல் 26, மே 7 என மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து இருக்கிறது. ஜூன் 1 வரை வாக்குப்பதிவு நடக்க ஜூன் 4 தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. பல மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்து இருக்கிறது. எனினும், தேர்தலை சந்திக்கவிருக்கும் மாநிலங்களில் தலைவர்கள் பேசும் ஒவ்வொரு விஷயமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சிலர் பேசும்விஷயங்கள் சர்ச்சையாகி மக்கள் மத்தியில் கண்டனத்தை குவித்து வருகிறது.
அப்படிதான் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பொறுப்பில் இருந்த சாம் பிட்ரோடா பேசிய விஷயம் நாடு முழுவதும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றது. தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கலந்து கொண்ட சாம் பிட்ரோடா, இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த நாடு.. இந்தியாவில் தென்கிழக்கு பகுதியில் இருப்பவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கு பகுதியில் இருப்பவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கில் இருப்பவர்கள் வெள்ளையர்கள் போலவும், தென்னிந்தியாவில் இருப்பவர்கள் ஆப்பிரிக்கர்களை போலவும் இருப்பார்கள் என பேசினார். இந்த விஷயம் காங்கிரஸ் கட்சியினர் நிறவெறியுடன் நடந்து கொள்வதாக பாஜகவினரால் விமர்சிக்கப்பட்டது. நாடு முழுவதும் சாம் பிட்ரோடாவின் பேச்சுக்கு அதிருப்தி எழுந்தது. எதிர்க்கட்சியினர் சமூக வலைத்தளங்கள் மூலமாக சாம் பிட்ரோடாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்கள். சர்ச்சைக்குரிய பேச்சை பேசிய சாம் பிட்ரோடா அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்த விலகி விலகினார்.
இந்நிலையில் நடிகையும் பாஜக உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பூ பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் கட்சியையும் திமுகவினரையும் சரமாரியாக விமர்சித்தார். திமுக ஆட்சி மூன்று ஆண்டு காலத்தை நிறைவடைந்து அதனை கொண்டாடி வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதிலளிக்க குஷ்பு , “கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை.. தங்களுக்கு தாங்களே கொண்டாடி வருகிறார்கள்.. மக்கள்தான் கொண்டாடவில்லை நாமே கொண்டாடலாம் என முயற்சி செய்கிறார்கள்” என திமுகவினரை விமர்சித்தார் குஷ்பு .
பிரதமர் மோடி திமுகவை நோக்கி காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொள்வீர்களா ? என கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து பேசிய குஷ்பு, “முதல்வருக்கு பிரதமரின் சவாலுக்கு பதில் கொடுக்க தைரியம் இருக்கிறதா? என்பதை பார்க்கலாம்.. பிரதமர் மோடி இத்தனை பெரிய சவால்விடும் இந்த சமயத்தில், காங்கிரஸ் திமுகவின் கூட்டணியை முறித்துக் கொண்டு தனியாக களமிறங்குகிறதா? தங்களால் தனியாக நிற்க முடியும் என்கிற தைரியம்தான் இருக்கிறதா? இந்தியா கூட்டணி, தாங்கள்தான் ஜெயிப்போம், பிரதமராக ராகுல் காந்திதான் பதவியேற்பார் என பேசிக்கொண்டிருக்கிறார்களே, காங்கிரஸ் ஏன் தமிழகத்தில் தனித்து போட்டியிட முடியவில்லை? என பதில் கேள்வி எழுப்பினர்..
தொடர்ந்து பேசிய குஷ்பு, ராகுல் காந்தி ஏன் அமேதி தொகுதியில் நிற்காமல் ரேபரேலியில் நின்றார்? பிரியங்கா காந்தி ஏன் தேர்தலில் களம் இறங்கவில்லை? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். பாஜகவினர் முடிவுகளில் உறுதியாக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்த குஷ்பு, “மான் கி பார் சார் சோ பார்” என முழங்கினார்.