சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பெயரில், போலி சமூக வலைதள கணக்கு துவங்கி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் தனி நபர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திருடி, அதைக் கொண்டு போலி கணக்கு துவங்கி, அந்த நபர்களுக்கு தெரிந்த நபர்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் ஏராளமான உள்ளன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரான ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பெயரில் ஒரு வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி, அதில் இருந்து அவரது ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் உள்ள நபர்களுக்கு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மூலமாக அவசரமாக பணம் தேவை எனக் கூறி ராதாகிருஷ்ணன் பேசுவது போலவே மெசேஜ் மூலமாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. கூகுள் பே மூலம் பணம் அனுப்புமாறு கூறி வேறொரு பெயரையும் எண்ணையும் அந்த மோசடி நபர் அனுப்பியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர், பணம் அனுப்பாமல் இது தொடர்பாக ராதாகிருஷ்ணனை நேரில் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். அப்போது தான் சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் மோசடியாக சமூக ஊடக கணக்கு வைத்து, பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என தனது உண்மையான சமூக வலைதள கணக்கில் இருந்து பதிவிட்டுள்ளார் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.
அரசு உயர் அதிகாரி பெயரில் பண மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பாக காவல்துறையினர் சைபர் கிரைம் பிரிவு மூலம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.