தமிழக வெற்றிக் கழக கட்சியின் நிர்வாகிகள் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழக கட்சியின் பதிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்த விவரங்களை நடிகர் விஜய் பொது அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் யாருக்கேனும் ஆட்சபனை இருக்கும் பட்சத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், தற்போது விஜய் தனது கட்சி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஜூன் மாதம் தனது பிறந்த நாளில் விஜய் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரையில் இந்த மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாரம். விஜய் தனது கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தையும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தான் தற்போது கட்சியின் பதிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்த விவரங்களை நடிகர் விஜய் பொது அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலாளர் தகிரா உள்ளிட்டோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் யாருக்கேனும் ஆட்சபனை இருக்கும் பட்சத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் போது அந்த கட்சியின் பெயரை பொது அறிவிப்பாக வெளியிட்டு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறும். அப்படி யாரும் ஆட்சேபனை தெரிவிக்காவிட்டால் விண்ணப்பித்தவர்களுக்கு கட்சியின் பெயர் ஒதுக்கப்பட்டு கட்சியும் பதிவு செய்யப்படும். ஆட்சேபனை தெரிவித்தால் கட்சி பதிவு செய்யப்படாது. இந்த அடிப்படையில் தான் தற்போது விஜயின் கட்சியின் பெயர் மற்றும் நிர்வாகிகள் விவரங்கள் பற்றி பொது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க தமிழ்நாடு தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கையும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மதுரையில் நடைபெற இருப்பதாக சொல்லப்படும் மாநாட்டில் தமிழகம் முழுவதும் தனது ரசிகர்களை வரவழைத்து தனது பலத்தை காட்டவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிவிட்டதாம். லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம்.