பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்திய நடிகர் விஜய்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருவதோடு, எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அவர் தீவிர பிரசாரம் செய்தார். தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து அவர் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே தான் இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாளாகும். அவர் இன்று தனது 70வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையடுத்து இன்று காலையில் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் 70 கிலோ கேக் வெட்டி எடப்பாடி பழனிச்சாமி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து” என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். லோக்சபா தேர்தலை புறக்கணித்த நடிகர் விஜயின் கட்சி வரும் 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே அவர் கட்சியை பலப்படுத்தும் பணியிலும், நிர்வாகிகள் நியமனத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் 2026ல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறாரா? இல்லாவிட்டால் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் தான் இன்று நடிகர் விஜய், எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.