தேர்வில் முதலிடம் பிடித்த மனைவியை தலித் என அடையாளப்படுத்துவதா?: ஜான்பாண்டியன் கண்டனம்!

பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் பகுதியைச் சார்ந்த மாணவி D.காவ்யஜனனி வெற்றி குறித்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தியில் “தலித்” என்று அந்த மாணவியை அடையாளப்படுத்தி இருப்பதைக் படித்த போது மனம் வேதனை அடைந்ததாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில், தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த வருடம் 3 மாணவிகள் தமிழக அளவில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி காவிய ஜனனியும் ஒருவர். இவர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கில பாடத்தில் 100, கணித பாடத்தில் 100, அறிவியல் பாடத்தில் 100, சமூக அறிவியல் பாடத்தில் 100 மற்றும் தமிழில் 99 மதிப்பெண்கள் என மொத்தம் 499 மதிப்பெண்களை பெற்று கமுதி மாணவி காவிய ஜனனி சாதனை படைத்துள்ளார். கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் – வசந்தி தம்பதியரின் மகளான இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காவிய ஜனனி வெற்றி குறித்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தியில் “தலித்” என்று அந்த மாணவியை அடையாளப்படுத்தி இருப்பதைக் படித்த போது மனம் வேதனை அடைந்ததாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஒவ்வொரு முறையும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுகின்றவர்களை “தலித்” என்ற வார்த்தையால் அடையாளப்படுத்தி உளவியல் தாக்குதல் செய்யும் பத்திரிக்கைகள் தங்கள் செயலை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். தேர்வு முடிவுக்கு அடுத்த நாள் வெளிவந்த ஆங்கில நாளிதழில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் பகுதியைச் சார்ந்த மாணவி D.காவ்யஜனனி வெற்றி குறித்து வந்த செய்தியை படித்தேன். அதில் “தலித்” என்று அந்த மாணவியை அடையாளப்படுத்தி இருப்பதைக் படித்த போது மனம் வேதனை அடைந்தேன். தன் திறமையால் கடின உழைப்பால் வெற்றி பெற்ற மாணவியை தலித் என்று அந்த செய்தியில் அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது எனது கேள்வி?

25 ஏப்ரல் 2018- ல் தமிழ் நாளிதழில் ஒரு செய்தி வந்தது அந்த செய்தியில் 1982 ஆம் ஆண்டு 10 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு உத்தரவை மேற்கோள்காட்டி மாநில மற்றும் மத்திய அரசு துறை சார்ந்த பணிகளில் பட்டியல் சாதியினரை “தலித்” என்று குறிப்பிட வேண்டாம் என்று அரசு துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று செய்தி வந்தது. அந்த செய்தி இன்றும் ஆவணமாக உள்ளது. இன்னும் சில பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளிவந்தது. ஆனால் அதே பத்திரிக்கை நிறுவனத்தின் ஆங்கில பத்திரிக்கையில் இன்றும் தலித் என்ற வார்த்தையின் மூலம் “தேவேந்திர குல வேளாளர்களை” அடையாளப்படுத்தும் வன்மம் தொடர்கிறது. தேவேந்திர வேளாளர்கள் இதை விரும்புவதில்லை என்பது தெரிந்தும் தொடர்ந்து அதனை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரம் பேரையூர் கிராமம் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்ந்த மாணவி D.காவ்யஜனனி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (499/500) மதிப்பெண் பெற்று சாதித்திருப்பதை ஒரு தலித் மாணவி அதிக மதிப்பெண் பெற்று சாதித்திருக்கிறார் என்று அடையாளப்படுத்தி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு இருப்பது உண்மையில் மன வேதனை அளிக்கிறது. அந்த ஆங்கில பத்திரிக்கை ஒரு வன்மத்தோடு செயல்படுகின்றனதோ என்ற கேள்வி எழுப்புகிறது. இந்தப் போக்கை பத்திரிக்கை நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தலித் என்ற வார்த்தையின் மூலம் “தேவேந்திரகுல வேளாளர்” சமூக மக்களை அடையாளப்படுத்தி உளவியல் தாக்குதல் நடத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்று மிகக் கண்டிப்போடு தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த ஆங்கில நாளிதழின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றேன். தன் திறமையால் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்து தான் பிறந்த ஊருக்கும், மாவட்டத்திற்கும், படித்த பள்ளிக்கும் தனது பெற்றோருக்கும் மாணவி D.காவ்ய ஜனனி அவர்களை மனதார பாராட்டுகின்றேன். கல்வி மூலம் உயர் பதவி அடைந்து மக்களுக்கு சேவையாற்ற அவரை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.