ராகுல் காந்தி என்ன பிரதமர் வேட்பாளரா?: ஸ்மிருதி இரானி!

பிரதமர் மோடி உடன் ஒரே மேடையில் விவாதம் நடத்த ரெடியாக இருப்பதாக ராகுல் காந்தி கூறிய நிலையில், இதை நக்கல் செய்யும் வகையில் ஸ்மிருதி இரானி பதில் ஒன்றை அளித்துள்ளார்.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதில் 3 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், நாளை 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடக்கும் 96 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. இருப்பினும், மற்ற தேர்தல் நடக்க வேண்டிய தொகுதிகளில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி உடன் ஒரே மேடையில் விவாதம் நடத்த தயார் என்று ராகுல் காந்தி நேற்று அறிவித்தது இருந்தார்.

இந்தச் சூழலில் ராகுல் காந்தியின் பேச்சை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நக்கல் செய்துள்ளார், அதாவது இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியாக இல்லாத போது.. பிரதமர் மோடி போன்ற உயர் பதவியில் இருப்பவருடன் எப்படி அவரால் விவாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “முதலாவதாக தங்கள் கோட்டை எனக் கூறி கொள்ளும் தொகுதியில் (அமேதி) சாதாரண பாஜக தொண்டருக்கு எதிராக போட்டிப்போடத் தைரியம் இல்லாதவர்.. அது இது எனப் பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும். அடுத்து பிரதமர் மோடியுடன் சமமாக அமர்ந்து விவாதம் செய்ய விரும்ப அவர் யார்? அவர் என்ன இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் மக்களின் சொத்துக்களைக் கணக்கிடுவது குறித்துப் பேசுகிறது.. பொதுமக்கள் சொத்தில் சரிபாதியைப் பறிக்க வேண்டும் என்று சொல்கிறது.. ராமர் கோயில் விவகாரத்தில் நடந்ததை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் பிரதமர் சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை.. நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் அவர்கள் பற்றி கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது. எனவே, பிரதமர் உடன் தான் விவாதம் நடத்துவேன் என அவர்கள் சொல்லக்கூடாது” என்றார்.

பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் அது தேர்தல் சமயத்தில் பொதுமக்களுக்குப் பெரியளவில் உதவும் என்றும் முன்னாள் நீதிபதிகள் மதன் பி லோகுர், ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என் ராம் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பைத் தான் ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி நேற்று சனிக்கிழமை அறிவித்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், “இது மக்களுக்குப் பெரியளவில் உதவும்.. நாம் என்ன சொல்ல வருகிறோம். அடுத்தகட்ட திட்டம் என்ன என்பதை மக்கள் அப்போது புரிந்து கொள்ள முடியும். இது மக்கள் தெளிவாக ஒரு முடிவை எடுக்க உதவும். இந்த விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால், நான் உறுதியாகச் சொல்கிறேன் மோடி இந்த விவாதத்திற்கு வர மட்டார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.