மோடி ஏன் சொந்த ஊர் குஜராத்தில் போட்டியிடவில்லை?: திருச்சி வேலுச்சாமி!

மோடி ஏன் சொந்த மாநிலமான குஜராத்தில் போட்டியிடாமல், உபிக்குப் போய் போட்டியிடுகிறார்? அவருக்குக் குஜராத்தில் நிற்கப் பயமா என்று திருச்சி வேலுச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி Vs ராகுல் யுத்தம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அம்பானியும் அதானியும் தான் காங்கிரஸ் கட்சி இதுவரை மோடிக்கு எதிரான டிரம்ப் கார்டு ஆகப் பயன்படுத்தி வந்தது. இப்போது அதே ஆயுதத்தைக் கொண்டு காங்கிரஸைத் திரும்பி அடித்துள்ளார் பிரதமர் மோடி. ஆனாலும், அசராத ராகுல், தன்னோடு தனியாக நின்று விவாதிக்கத் தயாரா? என்று ஒரு சீட்டை இறக்கி உள்ளார். அதற்குப் பலரும் அமெரிக்கத் தேர்தல் களத்தில் இரண்டு தலைவர்கள் ஒரே களத்தில் நின்று விவாதிப்பதைப் போல, இங்கே இவர்கள் இருவரும் விவாதிக்கலாம். அது நல்ல நடைமுறைதான் என்று கருத்து கூறிவருகின்றனர். இதனிடையே அமேதியில் தோல்வியைச் சந்திப்போம் என்று பயந்துதான், ராகுல் ராபேரேலிக்கு ஓடிவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டையும் பாஜக முன்வைத்து வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி பதிலளித்துள்ளார். அவர் மோடியின் பேச்சுகள் குறித்து, “மோடி எந்தக் காலத்தில் யாரிடம் விவாதத்திற்குச் சென்றிருக்கிறார்? அவர் என்றைக்கும் நிழல் யுத்தம் செய்பவர்தான். நான் கேட்கிறேன், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஒருமுறையாவது பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருக்கிறாரா? அவரா பேசிக் கொண்டே இருக்கச் சொன்னால் செய்வார். மோடி இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திப்பார். அது உறுதி. ஆகவேதான் அவர் பயத்தில் தப்புத்தப்பாக உளறுகிறார். இஸ்லாமியர்களை மிக மோசமாக விமர்சிக்கிறார். பிறகு நேரலையில் அவர்களைப் புகழ்ந்து பேசுகிறார். இந்தத் தடுமாற்றமே அவரது தோல்வியை உறுதி செய்யும். பொதுவாக எனக்குக் கருத்துக் கணிப்புகள் மீது நம்பிக்கை இருந்ததில்லை. ஏனென்றால், என் மனைவியே யாருக்கு ஓட்டுப் போடுவார் என்பது எனக்குத் தெரியாது. அப்படித்தான் என் பக்கத்து வீட்டுக்காரர் யாருக்கு ஓட்டுப் போவார் என்பதை என்னால் கணிக்க முடியாது. அப்படி உள்ளபோது நாடு முழுவதும் உள்ள இத்தனை சதவீதம் மக்கள், இவரை ஆதரிப்பார்கள்.. அவரை ஆதரிப்பார்கள் என்று முன்கூட்டியே கணிப்பது எல்லாம் சாத்தியமற்றவை.

ஆனால், அரசியலில் ட்ரெண்ட் என்று ஒரு விசயத்தைச் சொல்வார்கள். இந்தத் தேர்தலில் இவருக்கு ஆதரவாக மக்களின் மனநிலை உள்ளது என்பதைக் கணிக்க முடியும். அல்லது உணர முடியும். அப்படிப் பார்த்தால், மோடிக்கு எதிரான மனநிலை நாட்டில் உருவாகி இருக்கிறது. ஆகவே, பாஜக மிக மோசமாகத் தோல்வியைச் சந்திக்கும். எத்தனை இடங்களில் பாஜக தோற்கும் என்று ஒரு எண்ணிக்கையைச் சொல்ல மாட்டேன். ஆனால், பாஜக குஜராத் மாநிலத்திலேயே மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும். அது உறுதி” என்று பேசியுள்ளார்.

ராகுல்காந்திக்கு அம்பானியும் அதானியும் கறுப்புப் பணம் வழங்கியது தொடர்பாக மோடி வைத்துக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க முன்வந்த வேலுச்சாமி, “அம்பானியும் அதானியும் டெம்போவில் வைத்து ராகுல்காந்திக்குக் கறுப்புப் பணத்தை அனுப்பினார்கள் என்று மோடி சொல்கிறார். அதை யார் சொல்கிறார்? நாட்டின் பிரதமர் சொல்கிறார். இவர் பிரதமர் தானே? விசயம் தெரிந்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? விசாரணைக்கு உத்தரவு போட வேண்டும். போட வேண்டியதுதானே? யார் வீட்டுக்கோ இ.டி அதிகாரிகள் செல்கிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் செல்கிறார்கள். அப்படி என்னால், கறுப்புப் பணத்தைக் கொடுத்த வீட்டுக்கு இ.டி அதிகாரிகளை அனுப்ப வேண்டியதுதானே? ஏன் அனுப்பவில்லை? கறுப்புப் பணத்தைக் கொடுத்தவரை மோடி தெரிந்து வைத்துள்ளார். வாங்கியவரையும் தெரிந்து வைத்துள்ளார். அப்புறம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று எதிர்க் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதைப்போலவே ராகுல் அமேதி தொகுதியில் போட்டியிடாமல் ரேபரேலிக்கு பயந்து ஓடிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் உள்ள முரண்பாட்டை வேலுச்சாமி சுட்டிக்காட்டி உள்ளார். அது குறித்து அவர், “மோடி சொந்த மாநிலம் குஜராத் தானே? அவர் ஏன் சொந்தத் தொகுதியில் போட்டியிட வில்லை? ஏன் வாரணாசிக்குச் சென்றார்? அப்படி என்றால் அவருக்குப் பயம் என்று சொல்லலாமா? காங்கிரஸ் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும்? ராகுல் எங்கே போட்டியிட வேண்டும்? இதை எல்லாம் கட்சிதான் முடிவு செய்யும். மோடி முடிவு செய்து சொல்லும் இடங்களில் எல்லாம் நாங்கள் போட்டிப் போட முடியாது” என்று பேசியுள்ளார்.