ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் தேவையெனில் சபாநாயகரிடம் விசாரணை: தென்மண்டல ஐ.ஜி.!

“திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவுவிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் மூர்த்தி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசன், கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், துணை கண்காணிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறியதாவது:-

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காணாமல் போனதாக புகார் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகார் அளிக்க வந்தபோது 2 கடிதங்களை அவரது குடும்பத்தினர் கொடுத்தனர். அதில் மரண வாக்குமூலம் என கொடுத்த புகாரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயர் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், அந்த புகார் காவல் கண்காணிப்பாளருக்கு கிடைக்கப் பெறவில்லை.

2-வது கடிதம் உறவினருக்கு எழுதப்பட்டிருந்தது. 2 கடிதங்களிலும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாகவும், அரசியல் விவகாரம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கடிதத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் மரண வாக்குமூலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் 4-ம் தேதி காலை ஜெயக்குமார் வீடு அருகே அவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஜெயக்குமார் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. உடலில் கடப்பாக்கல் கட்டப்பட்டிருந்தது. கை, கால்கள் லூசாக கம்பிகளால் கட்டப்பட்டு, உடல் கருகிய நிலையில் இருந்தது. பின்னங்கால் முழுவதும் எரியாத நிலையில் இருந்தது. பின்பகுதி எதுவும் எரியாமல் இருந்தது. பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர் அவரது வாயிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.

கிடைத்த தகவல் மற்றும் தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 10 டி.எஸ்.பிகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலனாய்வு நடந்து வருகிறது. உடற்கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக இதுவரை கிடைக்கப் பெறவில்லை. முதற்கட்ட இடைக்கால ஆய்வறிக்கை மட்டுமே கிடைத்துள்ளது . இதில் உடலில் எந்தவிதமான வெட்டுக்காயங்களும் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சைபர் க்ரைம் தடய அறிவியல் துறை, கைரேகை நிபுணர் குழு என பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் சோதனைகளும் இந்த வழக்கில் நடந்து வருகிறது. விசாரணை முழுமை பெறவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கு சந்தேகம் மரணம் என பதியப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கொலையா, தற்கொலையா என என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பான பல தகவல்கள் கிடைக்கப்பெற வேண்டும்.

முதற்கட்ட பிரேத பரிசோதனையில் காயங்கள் இருந்ததாகவும் இறந்த உடலை எரித்ததாகவும் எந்த தகவலும் இல்லை. ஜெயக்குமார் எழுதிய கடிதங்கள் அறிவியல் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. டிஎன்ஏ சோதனை உட்பட பல்வேறு அறிக்கைகள் கிடைக்க வேண்டி உள்ளது. இந்த வழக்கில் பணம் தொடர்பான பிரச்சினை, அரசியல் தொடர்பான பிரச்சினை என பல பிரச்சினைகள் உள்ளது. சில விஷயங்கள் இதில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை கூடிய விரைவில் முடிவு பெறும்” என்று தெரிவித்தார்.

கொலையான ஜெயக்குமாருக்கும் தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவுக்கும் பிரச்சினை இருந்ததாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவை தலைவரிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, “கடிதத்தில் அவர் பெயர் இருக்கிறது. தேவைப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தப்படும். விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும்” என்று தென்மண்டல ஐஜி பதில் அளித்தார்.