இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்று முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. “ஊபா” சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக நிலப்பரப்பு. தமிழர் தாயக நிலப்பரப்பை ஒருங்கிணைத்து ‘தமிழீழ’ தனி நாட்டை இலங்கையில் உருவாக்க ஆயுதப் போராட்டம் நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 1980களில் இந்திய அரசு ஆதரவளித்தது. அதே நேரத்தில் 1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையேயான தமிழர் அரசியல் பிரச்சனை தொடர்பான ஒப்பந்தம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. இதனால் இலங்கையில் அமைதிப் பணிக்கு சென்ற இந்திய ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது குற்றச்சாட்டு. மேலும் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கையில் உள்ள தமிழர் தாயக நிலப்பரப்பான தமிழீழம் என்ற பகுதியையும் இணைத்து தமிழர்களுக்கான தனிநாடு ‘ அகன்ற தனித் தமிழ்நாடு” உருவாக்க விடுதலைப் புலிகள் சதி செய்தனர்; இதற்கான ஆயுத குழுக்களை உருவாக்கினர் என்பதும் மத்திய அரசின் குற்றச்சாட்டு. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1991-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரணை ஒன்றை நடத்தி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்தும் வருகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. ஆனாலும் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் 1967 (1967-ன் 37) பிரிவு-3-ன் கீழ், (1) மற்றும் (3) துணைப்பிரிவுகளின் அடிப்படையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் எல்.டி.டி.ஈ தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இந்திய குடிமக்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலையை கடைபிடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை இன்று முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்வதாகவும் மத்திய அரசு- இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.