சவுக்கு சங்கருக்கு வரும் மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கருக்கு வரும் மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மே 4ஆம் தேதி பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும் என கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் சவுக்கு சங்கரை 5 நாட்களுக்கு விசாரணை செய்ய அனுமதி தர வேண்டும் என கேட்ட நிலையில் ஒருநாள் விசாரணைக்கு அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இன்று மாலை உடன் ஒருநாள் காவல் முடிந்த நிலையில் சவுக்கு சங்கரை கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவருக்கு வரும் மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறையில் உள்ளதாகவும், கை முறிவு ஏற்பட்டு உள்ளதால் தனியாக இருக்க முடியாது, வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என கேட்டு இருந்தார். சவுக்கு சங்கரின் கோரிக்கையை கேட்ட நீதிபதி, இதனை மனுவாக கொடுத்தால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் பரிசீலிக்க சொல்வதாக கூறினார்.