பராமரிப்பு பணிகளுக்காக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பராமரிப்பு பணிகள் 60 நாட்கள் வரை நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தி்ல் தலா 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் 70 சதவிகிதம் வரையில் நிறைவடைந்துள்ளன. இதுபோல் 5 மற்றும் 6-வது அணுஉலைகள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முதல் இரு அணுஉலைகளிலும் ஆண்டுதோறும் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நாட்களுக்கு அணுஉலைகளில் மின்உற்பத்தி நிறுத்தப்படுகிறது. அந்தவகையில் 2-வது அணுஉலையில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக அதிகாலை 5 மணிக்கு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த நவம்பர் மாதமே யுரேனியம் எரிகோல்கள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறும் என்றும் இப்பணிகளுக்குப்பின் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்றும் அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.