விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு தனமாக உள்ளார்: ஆர்பி உதயகுமார்!

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை பற்றி கவலைப்படாமல் கடல் கடந்து லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின் எனவும், விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு தனமாக உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி மூன்றாண்டு முடிந்து.. நான்காவது அடியெடுத்து வைக்கிறது. இந்த அரசை வழி நடத்திவருகின்ற ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்ற போகிறார். குறிப்பாக கல்வி கடன் ரத்து என்கிற அந்த திட்டத்தை எப்போது நிறைவேற்றுகிற காலம் கனியும் என்று மாணவர்கள் காத்திருக்கின்றார்கள். அதேபோல மின்சார கட்டணத்தை இன்றைக்கு விண்ணை முட்டுகிற அளவிலே உயர்த்தியிருக்கிறீர்கள். நாங்கள் மின்சார கட்டணத்தை ஏற்ற மாட்டோம் என்று வாக்குறுதி சொன்னார்கள் ஆனால் மின் கட்டணத்தை ஏற்றி விட்டார்கள். அதேபோல மாதம் ஒரு முறை மின் கணக்கீடு பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று சொன்னார்கள். எதை செய்வோம் என்று சொன்னீர்களோ அதை நிறைவேற்றவில்லை, எதை செய்ய மாட்டோம் என்று சொன்னீர்களோ அதை செய்துள்ளீர்கள்.

மக்களை வாக்கு வங்கிக்காக ஏமாற்றுகிற வாக்குறுதிகளை நீங்கள் கொடுப்பது என்பது மிகப்பெரிய அளவிலே மக்களிடத்திலே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏமாற்ற வேண்டும் என்று சொன்னால் அவர்களின் ஆசையை தூண்ட வேண்டும். ஆனால் நீங்கள் மக்களிடம் ஒரு பேராசையை தூண்டியுள்ளீர்கள். மக்களுக்கு பேராசையை செயற்கையாக நீங்கள் தூண்டிவிட்டு அதிலேயே வாக்கு வங்கிக்காக குளிர்காய நினைக்கிற உங்கள் அரசியல் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆகவே இது கொடுத்த வாக்குகளை எல்லாம நீங்கள் நினைவிலே வைத்துக் கொள்கிறீர்களோ, இல்லையோ மக்கள் இன்றைக்கு கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களிடத்தில் இருக்கிறது என்று சொல்லி சொன்ன உதயநிதி லண்டனில் இருக்கிறார். ஆனால் இங்கே ஒன்னரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து ரகசியத்தை பற்றி கவலைப்படாமல் கடல் கடந்து லண்டனில் தன்னுடைய சுற்றுலா முகாமிட்டுள்ளார். மாணவர்களுக்கு வழிகாட்டும் இளைஞர் நலம், விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு தனமாக உள்ளார். இது எல்லாம் அவர் காதுக்கு எட்டுமா? தேர்வுக்கு பின் மாணவ மாணவிகளுடைய எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்ற காலமாகும் இந்த காலம். இந்த காலத்திலே அவர்களுக்கு ஒரு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டியது அரசுடைய கடமை. ஆனால் அமைச்சர் கடமையிலிருந்து இன்றைக்கு தவறி நீங்கள் லண்டன் சுற்றுலா சென்று இருப்பது மக்களிடத்திலே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தலைவர்கள் முதல் எம்எல்ஏ, தொண்டர்களும் இன்றைக்கு அங்கே சுற்றுலா மேற்கொண்டு சுற்றுலா மேம்பாட்டு கழகமாக திமுக மாறி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.