சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கியது மத்திய அரசு!

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சிஏஏ அமலுக்கு பிறகு முதல் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டன. மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா இன்று 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கி, அவர்களை வாழ்த்தினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் அறிவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்ததுடன், இந்தச் சட்டத்துக்கான விதிகளையும் மத்திய அரசு அறிவித்தது. மேலும், குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறை முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் நடைபெறும் என்றும் அறிவித்தது. அதன்படி, தற்போது குடியுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.