விருந்துகளில் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக பாடகி சுசித்ரா தெரிவித்த புகாரின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
பாடகி சுசித்ரா என்பவர், நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் வெள்ளித் தாம்பாளத்தில் போதை பொருளான கொகைன் (Cocaine) அளிக்கப்படுகிறது என்று சர்வ சாதாரணமாக கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அவருடைய முன்னாள் கணவர் கொகைன் எடுத்து கொள்கிறார் என்றும் தமிழ் திரைப்பட உலகில் (Kollywood) போதை பொருள் என்பது சகஜமாக உள்ளது என்றும் கூறியிருப்பது தமிழகம் மற்றும் திரை உலகம் திசை மாறி செல்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஒரு நேர்காணலில் பெண் போலீசார் குறித்து பேசியதற்கு பேட்டி அளித்தவரையும், பேட்டி எடுத்தவரையும் கைது செய்த தமிழக காவல்துறை, இந்த நேர்காணலில் சுசித்ரா போதை பொருள் குறித்து பேசிய விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர் குறிப்பிட்டவைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் கூறியதில் அடிப்படை ஆதாரமிருந்தால், கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் மிகச்சிறந்த நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். சுசித்ரா கூறியதில் உண்மையில்லையெனில், மறுப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் மீது புகார் அளித்து வழக்கு தொடுக்க வேண்டும். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
முன்னதாக சுசி லீக்ஸ் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாடகி சுசித்ரா தற்போது அளித்திருக்கும் பேட்டி பற்றி தான் சினிமா ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சுசி லீக்ஸ், தனுஷ், தன் முன்னாள் கணவரான கார்த்திக் குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றி பேசியிருக்கிறார். இந்நிலையில் அவர் தமிழ் திரையுலகில் போதைப் பொருள் பழக்கம் சாதாரணமானது என தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் சுசித்ரா கூறுகையில், கார்த்திக் குமார் ஸ்டேஜ் ஏறினால் நாலு லைன் கொக்கைன் அடிச்சுட்டு வரானு எல்லோருக்கும் தெரியும். கமல் ஹாசன் பார்ட்டிகளில் எல்லாம் வெள்ளி தாம்பூலத்தில் கொண்டு வருவாங்க கொக்கைன். அதை வேண்டாம்னு சொன்னதுக்கு என்ன வச்சு செய்றாங்களா. கோலிவுட்டில் போதை கலாச்சாரம் சகஜமாக இருக்கிறது. அதை எதிர்த்து போராட முயன்று கொண்டிருக்கிறார் சரத்குமார். போதை கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளார் ராதாரவி என்றார்.
சுசி லீக்ஸ் டைமில் நான் ரொம்ப டார்ச்சர் அனுபவித்திருக்கிறேன். தனுஷ், கார்த்திக் குமார் செய்த பிராடு வேலையை சாமிகிட்ட விட்டுட்டேன். அவரு எனக்காக பழி வாங்கிக் கொண்டிருக்கிறார். தனுஷ் குடும்பம் சின்னாபின்னமாகிடுச்சு. இன்னும் நிறைய மோசமானது எல்லாம் நடக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார் சுசித்ரா.