சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் ஆவணங்களை ஒருவாரத்தில் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப். 25ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மேலே ஏறிச் சென்று பார்த்த இளைஞர்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில், அந்தத் தொட்டியில் இருந்து அன்றைய நாளில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி, திருச்சியிலுள்ள மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பரிசோதனையின் அறிக்கை ஏப். 29 பெறப்பட்டதாகவும், குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க் கிருமி எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வெளியிட்ட செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுக்கோட்டை சங்கம்விடுதியில் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார்ப் மீதான் மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (மே. 15) விசாரணைக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த சண்முகம் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், சங்கம் விடுதி கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீா்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது. இந்தக் குடிநீரைப் பருகிய பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுதொடா்பாக கந்தா்வக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். ஆனால், இந்த வழக்கில் முறையான விசாரணை இல்லாததால், எந்த முன்னேற்றமும் இல்லை.
இதேபோல, வன்னியன் விடுதி, அரையாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தேநீா்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தை பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களுக்கு வாடகைக்கு விட மறுக்கின்றனா். இந்தப் பகுதியில் பட்டியலின மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதுடன், சங்கம் விடுதி மேல்நிலை குடிநீா்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது தொடா்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், தனபால் ஆகியோா் அமா்வு முன் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, சங்கம் விடுதி கிராமத்தில் மேல்நிலை குடிநீா்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டது தொடா்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய விவகாரத்தில், அரசுத் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
அப்போது அரசுத் தரப்பில் மேல்நிலை குடிநீா்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் குடிநீா் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதில் சாணம் கலக்கப்படவில்லை, பாசி படா்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு விசாரணை இன்று (15-ஆம் தேதிக்கு) ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இன்றைய வழக்கின் விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு தரப்புக்கு சரமாரி கேல்விகளை எழுப்பினர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் ஆவணங்களை ஒருவாரத்தில் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.