ரெட் பிக்ஸ் நிறுவனர் ஃபெலிக்ஸ் வீட்டில் சோதனையிட சென்ற போலீசாருடன், அவரது மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் நுழையும் போது போலீசாரை பரிசோதனை செய்வேன் என்றும், ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு போலீசார் தான் பொறுப்பு என்றும் கூறி அதிர வைத்தார்.
பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கையை போலீசார் தாக்கி உடைத்ததாக குற்றம்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கர் பேட்டியை யூடியூப்பில் ஒளிபரப்பு செய்த காரணத்தால் ரெட் பிக்ஸ் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. இவர் கடந்த 10ஆம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். அங்கிருந்து தனிப்படை போலீசார் அழைத்து வந்து திருச்சி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் தனது கணவரின் நிலை பற்றி தெரியவில்லை என்று கூறி ஃபெலிக்ஸ் மனைவி ஜேன் ஆஸ்டின் திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் முறையிட சென்றார். அதற்குள் திருச்சி சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் ஃபெலிக்ஸை நேரில் சந்தித்து பேசி விட்டு நள்ளிரவு சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் ஃபெலிக்ஸ் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்ற ஆணையுடன் போலீசார் சென்றனர். அப்போது, வீட்டிற்குள் அனுமதிக்காமல் ஜேன் ஆஸ்டின் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். முதலில் நீதிமன்ற ஆணையை முழுவதுமாக படித்து பார்த்தார். போலீசார் தங்களது காலணிகளை அகற்றி விட்டு உள்ளே வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்டு அனைத்து போலீசாரும் தங்களின் ஷூக்களை கழற்றினர். எத்தனை பேர் உள்ளே வரப் போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு 6 போலீசார் எனப் பதிலளித்தனர். பின்னர் பேசுகையில், எனக்கு நிறைய பயமிருக்கிறது. எதையாவது உள்ளே வைத்து விட்டு சென்றால் என்ன செய்வது? நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். நீங்கள் உள்ளே வந்து எதையாவது செய்து, அதனால் எதும் சிக்கல் வந்தால் முழு பொறுப்பை நீங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். வீட்டை காலி செய்து விட்டு செல்லும் நிலையில் நான் இல்லை. என்னுடைய மகன் 12வது முடித்து விட்டு கல்லூரியில் அட்மிஷன் போட்டுள்ளோம். அங்கு இந்த வீட்டு முகவரி தான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டை மாற்ற முடியாது என்றார்.
அனைவரும் உள்ளே சென்றதும், உடனிருந்தவர்கள் மூலம் வீடியோ பதிவு செய்ய தொடங்கினார். போலீசாரை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் உள்ளே சென்ற போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனையிடத் தொடங்கினர். போலீசாரிடம் மிகவும் ஃபெலிக்ஸ் மனைவி மிகவும் கறாராக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டில் சோதனை நடத்தி முடித்த பின், அவரது அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, வீட்டில் சோதனை முடிந்த பிறகு பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீசார் கைப்பற்றியது 53 பொருட்கள்.. போலீசாருக்கே ஒரு குழப்பம் இருந்தது. முதலில் 59 பொருட்கள் என்றனர். அப்போது எந்த அதிகாரியிடம் போன் கால் வந்தது என்று தெரியவில்லை. உடனே இன்னொரு லெட்டர் எழுதுங்க என்று சொன்னார்கள். அதில், 53 பொருட்கள் குறிப்பிட்டுள்ளார். சிம்கார்டு, பெலிக்ஸின் ஐடிகார்டுகள் போன்றவற்றை எடுத்தார்கள். காலையில் ஒரு 8 மணிக்கு வந்திருந்தேன். 8 மணிக்கு வந்த உடனேயே 20 முதல் 30 நிமிடத்தில் போலீசார் வருவதாக தகவல் வந்தது. திடீரென்று போலீஸ் வருவதாக சொன்னதும் எனக்கு ஒரு பயம் வந்தது. நான் இதை நினைக்கவில்லை. அவர்களிடம் செர்ச் வாரண்ட் இருக்கும் என்று. திடீர்னு போலீஸ் கதவை உடைத்து வந்தால் நம்முடைய மனநிலை எப்படி இருக்கும். இதை எல்லாரும் புரிஞ்சுக்கணும்.
கணவர் வந்து ஒரு நாள் முன்னாடி ஜெயிலில் அடைக்கப்படுகிறாங்க.. அதுவும் அன்எக்ஸ்பெக்டட்.. நான் இதையெல்லாம் கடந்து வீட்டுக்கு வரனும்.. ஆபீஸ் போகனும்.. இப்படியெல்லாம் இருக்கும் பட்சத்தில் திடீரென்று காவல்துறை காலை 9 மணிக்கு இங்க வந்து நிற்குறாங்க.. வி ஆர் சியர்சிங் பார் மி என்று சொல்லும் போது எனக்கு இதைவிட ஒரு மன கஷ்டத்தை தமிழ்நாடு அரசு கொடுக்க முடியாது. ஊடகங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எல்லாருக்கும் தெரியுது நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிரமப்படுகிறேன் என்று. சாப்பாடு இன்றி தூக்கமின்றி சிரமப்படுகிறேன். நான் அடிக்கடி கோர்ட்டுக்கு போனது கிடையாது. இது தான் முதல் தடவை. கோர்ட்டில் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. சாதாரண பெண்கள், மனைவிகளுக்கு இதுமாதிரியான கஷ்டம், நெருக்கடியை தமிழ்நாடு அரசு கொடுக்க கூடாது என்பது தான் என்னுடைய பணிவான கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.