ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் காப்பர் லிமிடட் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் ஏற்பட்ட லிஃப்ட் கோளாறு காரணமாக 15 அதிகாரிகள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களில் 3 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று சுரங்கத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று ராஜஸ்தான் வந்திருந்தது. அந்தக் குழுவானது ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு 8 மணியளவில் சுரங்கத்தில் இருந்து வெளியே வர முற்பட்டது. அப்போது லிஃப்ட்டின் ஒரு சங்கிலி எதிர்பாராத விதமாக அறுந்தது. இதில் 15 பேரும் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர். 12 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் இவர்களில் 3 பேர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், உபேந்திரா பாண்டே, பனேந்து பண்டாரி, நிரஞ்சன் சாஹு, ஜிடிகுப்தா, ரமேஷ் நாராயண் சிங், வினோத் சிங் ஷெகாவத், ஏகே பைரா, அர்னவ் பாப்டாரி, யஷ்ராஜ் மீனா, விகாஸ் பரீக், கரண் கெலாட், பாகிரத் ஆகியோர் சிக்கிக் கொண்டுள்ளனர். மீட்கப்பட்ட மூவர் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணியில் போலீஸும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. அறுந்து விழுந்த லிஃப்ட்டை கட்டி இழுப்பதற்காக முயற்சிகள் நடந்து வருவதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ தரம்பால் குர்ஜார் கூறுகையில், “தேர்தல் பிரச்சாரத்துக்காக ஹரியாணா சென்றிருந்தேன். அங்கு எனக்கு இத்தகவல் கிடைத்தது. உடனே திரும்பினேன். மீட்புக் குழுவுக்கு அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நிர்வாகமும் விழிப்புடன் மீட்புப் பணியை கண்காணித்து வருகிறது. இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்” என்றார்.