தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்: செல்வபெருந்தகை

தமிழகத்தின் உரிமைகளை, வாழ்வாதாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும், டெல்டா பகுதி விவசாயிகளுக்காக காவிரி நீரை பெற போராடுவோம் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தோல்வி அச்சத்தால், நாட்டில் குழப்பத்தையும், வன்முறையை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

எல்லா மாநிலங்களிலும் பா.ஜனதாவிற்கு எதிராக மக்கள் அணி திரண்டு வருகிறார்கள். இடஒதுக்கீடு நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பா.ம.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாதம். இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிர்நீத்தவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்காது. சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்திட முதல் எதிரியாக இருப்பது பா.ஜனதா.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தின் உரிமைகள், வாழ்வாதாரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். டெல்டா பகுதி விவசாயிகளுக்காக காவிரி நீரை பெற்று தர போராடுவோம். தேவைப்பட்டால், மாநில எல்லையான ஓசூரில் போராட்டத்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு உரிய நீரை அவர்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.