குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கூறியதாவது:-
குடியுரிமை திருத்தச் சட்டம் நீண்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இன்றைய பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பலர் பிரிவினையை விரும்பவில்லை. ஆனால், பிரிவினை நிகழ்ந்தது. பிரிவினையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மகாத்மா காந்தி, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல், முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் கல்வி அமைச்சர் மெளலானா ஆசாத் என நாட்டின் முதல் தலைமுறைத் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். அதோடு, அடுத்து வந்த நாட்டின் பிரதமர்கள் ஒவ்வொருவரும் இத்தகைய வாக்குறுதியை அளித்திருக்கிறார்கள். எனவே, இந்த சட்டம் முன்பே நிறைவேற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பே குடியுரிமை வழங்கி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள் ஆவர். இதையடுத்து அவர்களில் 14 விண்ணப்பதார்களுக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நேற்று முதல்முறையாக வழங்கினார். குடியுரிமை பெற்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஜய் குமார் பல்லா, சிஏஏ சட்ட விதிகளின் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.
இந்திய குடியுரிமை சான்றிதழ் பெற்ற பாவனா என்பவர் நேற்று அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் இருந்து நான் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா வந்தேன். அங்கு பெண்கள் வெளியே சென்று படிப்பது சிரமம். இந்திய குடியுரிமை சான்றிதழ் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் தற்போது 11-ம் வகுப்பு படிக்கிறேன். நான் மேல் படிப்பு படிப்பேன்” என்றார்.
சான்றிதழ் பெற்ற ஹரிஸ் குமார் என்பவர் கூறும்போது, “டெல்லியில் நான் 14 ஆண்டுகளாக வசிக்கிறேன். எனது கனவு நனவாகியுள்ளது. எனக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.