போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் போதை பொருள் விற்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட ஆணையர்களும் பங்கேற்றனர். போதை பொருள் ஒழிப்புக்கு எதிராக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிவிப்புகளோ பத்திரிகை செய்தியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இந்த கூட்டத்தில் போதை பொருளை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையம், ரயில் நிலையம் , பேருந்து நிலையங்கள் என அண்டை மாநில எல்லைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும், போதை பொருள் விற்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட இன்னும் அதிகமாக கண்காணித்து போதை பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும். துறைவாரியாக செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த காவல் துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் நிறைய குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் மதுரையில் பைக் ஓட்டி வந்த அப்பாவி ஒருவர் கஞ்சா போதை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இது போல் தமிழகத்தில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று கூட சென்னை துரைப்பாக்கத்தில் வாகன தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்த போது நங்கநல்லூரை சேர்ந்த ஐடி ஊழியரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் ரூ 1.5 கோடி மதிப்பிலான 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில் திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்க நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்குமார் யாதவ் (21) என்பவர் சென்ட்ரலில் ரயிலில் வந்தபோது அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.