இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா!

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய மம்தா, திடீரென தனது டோனை மாற்றியுள்ளார்.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதில் 4 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் மட்டுமே பாக்கி உள்ளது. இதனால் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா திடீரென தனது டோனை மாற்றியுள்ளது போல தெரிகிறது. பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கக்கூடாது என்பதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டு இந்தியா கூட்டணியை உருவாக்கின. திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள் என பல கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெறிருந்தன. இவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இருப்பினும், மேற்கு வங்கத்தில் தொகுதி உடன்பாட்டில் மம்தா- காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக மம்தா அறிவித்தார். இதனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக vs இந்தியா கூட்டணி என்ற மும்முனை போட்டி உருவானது.

இதற்கிடையே இப்போது மம்தா தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதாக தெரிகிறது. அதாவது லோக்சபா தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியை அமைக்குமானால் அதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்போவதாக மம்தா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நாங்கள் இந்தியா கூட்டணிக்கு உதவுவோம்.. வெளியில் இருந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவுவோம். ஏனென்றால் மத்தியில் அமையும் ஆட்சியில் நாங்கள் பங்களித்தால் மட்டுமே மேற்கு வங்கத்தில் உள்ள பெண்கள் எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களும் எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் மேற்கு வங்கத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியும் சிபிஐ(எம்) கட்சியும் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த இருவரும் பாஜகவுடன் உள்ளன. டெல்லியில் உள்ள இரு கட்சி தலைமைகளும் தான் இந்தியா கூட்டணியில் உள்ளன” என்றார்.

நாட்டின் சுமார் 70 சதவீத இடங்களுக்கான லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், மம்தா பானர்ஜி இப்படியொரு கருத்தை கூறியிருக்கிறார். மேற்கு வங்கத்தை பொறுத்தவரை அங்கு மொத்தம் 42 சீட்கள் உள்ளன. அங்கு ஏழு கட்டங்களிலும் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் இதுவரை 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 24 தொகுதிகளுக்கு அடுத்து வரும் கட்டங்களில் தேர்தல் நடக்க உள்ளது.