கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது. இதையொட்டி பூங்காவில் பூத்து குலுங்கும் கோடிக்கணக்கான மலர்களை காண சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி நாளை துவங்கி மே 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி 2 நாட்கள்தான் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு 10 நாட்கள் நடத்தப்படவுள்ளன. இதற்காக ஏற்கனவே பூங்காவில் நடப்பட்ட பல லட்சம் மலர் நாற்றுகளில் தற்போது கோடிக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
சிறப்பம்சமாக சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு நெருப்புக்கோழி, சேவல், மயில், மலர் வீடு, மலர் இதழ்கள் ஆகிய உருவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மலர் கண்காட்சியில் 25,000 மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட உள்ளன. தனியார் பங்கேற்பாளர்களும் தங்களது மலர்களை பார்வைக்காக வைக்க உள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பூங்கா அலுவலகம் அருகே ‘ஐ லவ் கோடை’ என்று சால்வியா மலர்களால் செல்பி பாயிண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சி முன்னேற்பாட்டு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர், கழிவறை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்தி தர வேண்டும், மலர் கண்காட்சி நடக்கும் 10 நாட்களும் சுற்றுலாப்பயணிகள் தங்கு தடையின்றி வந்து கண்டுகளிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மலர் கண்காட்சியுடன் கோடை விழாவும் நடைபெற இருப்பதால் கொடைக்கானலில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலர் கண்காட்சியில் முதன்முதலாக சுற்றுலாப்பயணிகளுக்காக ‘360 டன்னல் என்ற ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்கான புதிய கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியில் நின்று கொண்டு தங்களது செல்போன் கேமரா மூலம் 360 டிகிரி சுழன்று வீடியோ எடுத்து கொள்ள முடியும். இதன்மூலம் சுற்றிலும் உள்ள மலர் கூட்டத்தை கவர் செய்ய முடியும்.