தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணை செய்த நிலையில், தற்போது விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் பாதுகாவலா் கணேசன் என்பவருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகாா் எழுந்தது. தமிழகத்தில் 2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது, வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீடு ஒதுக்கியதாக கூறி, 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி வழக்கிலிருந்து அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. ஆனால், இதை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டாா். மேலும், மாா்ச் 28-ஆம் தேதி அமைச்சா் பெரியசாமியை விசாரணைக்கு ஆஜராகுமாறும் ஆணை பிறப்பித்தாா். இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அமைச்சா் ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஐ.பெரியசாமியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது எனத் தெரிவித்தனர்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை கீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணை செய்த நிலையில், விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.