உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருந்தது. அவர் முதலில் கைதாகி சிறையில் இருந்த போதிலும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்தார். அவர் அமைச்சராகத் தொடர்வதே அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

ஜாமீன் கோரியும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இரண்டு முறை இந்த மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு இருப்பதாகவும் இதனால் மருத்துவ காரணங்களால் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் கூடாது என்றும், இதை நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்து உள்ளது என்றும் தெரிவித்தது. மேலும், மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்குவது ஆதாரத்தைக் கலைக்கக் காரணமாக அமைந்துவிடும் என்றும் அமலாக்க துறை தெரிவித்தது.

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே பல கைதிகள் 2, 3 ஆண்டுகள் ஜாமீன் கிடைக்காமல் சிரையில் உள்ளதாகவும் அவ்வளவு ஏன் வழக்கு கூட விசாரணைக்கு வராமல் பலர் சிறையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இடைக்கால ஜாமீன் பற்றி உடனே முடிவு எடுக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை இன்று விசாரிப்பதாகக் கூறினர். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.