தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நோக்கம்: செல்வபெருந்தகை!

தமிழகத்தில் 57 ஆண்டை வீணாக்கிவிட்டோம். இங்கு காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நோக்கமாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை கேஎஸ் அழகிரி தலைவராக இருந்தார். லோக்சபா தேர்தல் நெருங்கி வந்த நிலையில் காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். தற்போது தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதி, புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் செல்வபெருந்தகை கட்சியை வலுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் வேலூர் மாநகர் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்று பேசினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 57 ஆண்டு காலம் ஆட்சி இழந்து பணியாற்றி கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் கட்சியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. எவ்வளவு காலம் கூட்டணியில் இருக்க முடியும்? மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் நாங்கள் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ளோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு மக்களோடு மக்களாக காங்கிரஸ் கட்சியின் கொள்கை ,கோட்பாடு காங்கிரஸ் கட்சி என்னென்ன சட்டங்கள் திட்டங்கள் கொண்டு வந்துள்ளது என்பதை மக்களிடம் சென்று சேர்க்க உள்ளோம்” என்றார்.

மேலும் செல்வ பெருந்தகையிடம், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் தற்கொலையா என்பதை முடிவு செய்ய முடியவில்லை என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களைப் பார்க்கும்போது அது முழுக்க முழுக்க கொலைதான். அவர் இறந்ததைப் பார்க்கும் பொழுது அதைத் தற்கொலை தான் என்று சொல்ல முடியாது. அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்பதால் வடக்கு மண்டல ஐ ஜி அதை கொலையா தற்கொலையா எனக் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக இன்னும் உடற்கூறு ஆய்வு முழுவதுமாக கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவருடைய விசாரணையில் அவர் அப்படி கூறி இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பார்வையில் அது கொலைதான்” என்றார்.

மேலும் சபாநாயகர் அப்பாவுவை தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தற்பொழுது புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதில் நாம் தலையிட கூடாது. அப்படி ஏதாவது தகவல் தெரிவித்தால் அதை விசாரணை கேட்க குந்தகம் ஏற்படும். எங்களைப் பொறுத்தவரை அது தற்கொலை இல்லை” என்றார்.