பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காவல் துறையினரை அவதூறாகப் பேசியதாக சவுக்கு யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சியிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார் சில தினங்கள் முன் கைது செய்தனர்.
கைதுக்கு முன்னதாக, பெலிக்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த வாரமே கைது செய்யப்பட்டுவிட்டார். எனவே அவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி “பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுவிட்டதால் அவரின் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது” என்று கூறி பெலிக்ஸ் ஜெரால்டின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையே, பெலிக்ஸ் ஜெரால்டு கைது தொடர்பாக அவரது மனைவி ஜோன் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவில், “காவல்துறை தரப்பில் பெலிக்ஸ்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. விசாரணையின் பெயரில் காவல்துறையினர் எங்கள் வீட்டில் வந்து அச்சுறுத்துகின்றனர், எங்களை காவல்துறை துன்புறுத்துகிறது. நடந்த சம்பவத்துக்கு ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டோம். எனவே எங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது” என்று பெலிக்ஸ் மனைவி ஜோன் வலியுறுத்தியுள்ளார்.