தீண்டாமை செயல்கள் நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று உயர் நீதிமன்றக் கிளை கடுமையாக எச்சரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளபொம்மன்பட்டியைச் சேர்ந்த சாமிநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வெள்ளபொம்மன்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன், காளியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். நடப்பாண்டு திருவிழா வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களை பங்கேற்கஅனுமதிப்பதில்லை. இவர்களிடம் கோயில் திருவிழா வரியும் வசூலிப்பதில்லை. இது தீண்டாமையாகும்.
இதுகுறித்து வேடசந்தூர் வட்டாட்சியரிடம் புகார் அளித்தோம். ஆனால், வட்டாட்சியர் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையில், பிற சமூகத்தினர் பங்கேற்கவில்லை. அதிகாரிகள் பிற சமூகத்தினருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். எனவே, கோயில் திருவிழாவில் ஆதிதிராவிட வகுப்பினர் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேடசந்தூர் வட்டாட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு, நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, வேடசந்தூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். அதில், ஆதிதிராவிட வகுப்பினரையும் சேர்த்து திருவிழா கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் சில பகுதிகளில் தீண்டாமை நிலவுவதும், பாகுபாடு பார்ப்பதும் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நீதிமன்றம் உள்ளது. தற்போதும் சில இடங்களில் தீண்டாமை நிலவுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு மனிதன், சக மனிதனிடம் பாகுபாடு பார்பது ஏற்புடையது அல்ல. கோயில் திருவிழா கொண்டாட்டத்தில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திருவிழாவின்போது எவ்வித சட்டம் – ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாதவாறு போலீஸார், வருவாய்த் துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.