ஹோட்டல் சமையல் கூடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்: தமிழக பாஜக!

மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஹோட்டல் சமையல் கூடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை உள்பட தமிழகத்தின் நகரப் பகுதிகளில் பல இடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் பிரியாணி கடைகள், துரித உணவகங்கள் எவ்வித உணவுப் பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றுவதில்லை. பெரும்பாலான உணவகங்களில் சுத்தம், சுகாதாரம் என்பதே இல்லை.இப்போது ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் வகைகள் உள்ளிட்ட அசைவங்களின் விலை அதிகரித்துவிட்டது. இதனால் இவற்றை சேமித்து வைக்க குளிர்பதன பெட்டிகளை உணவகங்களில் வைத்துள்ளனர். பெரும்பாலான உணவகங்களில் குளிர்சாதன பெட்டிகள் தரமானதாக இருப்பதில்லை. இதனால் இறைச்சி வகைகள் கெட்டுப் போகின்றன. சமைக்கப்பட்டு விற்பனையாகாத பிரியாணி, அசைவ உணவு வகைகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி விற்பனை செய்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி உணவகங்கள் குறிப்பாக, சமையல் கூடங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுவதே இல்லை. இதனால் எலி, பல்லி கரப்பான்பூச்சி உள்ளிட்டவற்றின் பாதிப்பும் உணவில் ஏற்படுகிறது.

எனவே, சிறிது, பெரிது என எந்த உணவகமாக இருந்தாலும் அவை சுகாதாரமாக பராமரிக்கப்படுவதையும், சுகாதாரமான உணவு விற்கப்படுவதையும் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.அனைத்து உணவகங்களின் சமையல் கூடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சமைக்கப்படும் காட்சிகள் சாப்பிடும் இடத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் வாங்கப்படும் இறைச்சிகள் முறையான பில்லுடன் வாங்கப்பட வேண்டும். பயன்படுத்தப்பட்ட இறைச்சி, மீதமுள்ள இறைச்சி, கெட்டுப் போனதால் அப்புறப்படுத்தப்பட்ட இறைச்சிகள் குறித்து முறையான கணக்கு வழக்குகளை பராமரிப்பதற்கான ஆன்லைன் போர்டல் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யும் மொத்த இறைச்சி கடைகளிலும் ஒவ்வொரு நாளும் நடைபெறும் இறைச்சி கொள்முதல், வீணாகும் இறைச்சி கழிவு விவரங்களை சரிபார்க்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளும் வணிகவரித் துறை அதிகாரிகளும் ஒரு செயல்திட்டம் உருவாக்க வேண்டும்.

தமிழக சுகாதாரத் துறையில், படித்து வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் சுகாதாரத்துறை மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, உணவகங்களில் சுத்தமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மாதம் ஒரு முறை கட்டாய சோதனை நடைபெற வழிவகை செய்ய அரசு முயல வேண்டும். அனைத்து உணவகங்களுக்கும், சாலையோர உணவு கடைகள் உள்பட அனைவரும் லைசென்ஸ் எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும். தமிழகம் முழுக்க உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் குறித்த புகார்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.