படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர் கோயில் என்ற பழமொழி மோடிக்குதான் பொருந்தும் என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அண்மையில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தினை விமர்சித்தார். இதனால் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றும், மேலும், இலவச பேருந்து பயணத் திட்டத்தின் காரனமாக போக்குவரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுச் சூழல் பாதிப்படைந்துள்ளதாகவும் விமர்சனம் செய்தார் பிரதமர். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
பிரதமர் மோடி ஊருக்கு ஒரு பொய் சொல்வது என முடிவு எடுத்துவிட்டார். கடந்த முறை உத்தர பிரதேசத்தில் 90 சதவிகித இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இந்த முறை 9 சதவிகித இடங்களில் கூட வெல்ல முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு பல நன்மைகள் நடந்துள்ளதாக உத்தர பிரதேசத்தில் இருந்து இங்கு பணிக்கு வந்தவர்கள் சொந்த ஊர்களில் சொல்கிறார்கள். தமிழகத்தில் இருப்பது போல ஒரு முதல்வர் உத்தர பிரதேசத்திற்கு கிடைக்க மாட்டாரா என்று அந்த மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாகத்தான் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். மெட்ரோ ரயில்கள் மீது பிரதமருக்கு உண்மையில் அக்கறை இருந்திருந்தால் நிதியை ஒதுக்கீடு செய்திருப்பார். நிதியை கொடுத்துவிட்டு கேள்வி கேட்டால் கூட சரி எனலாம். நிதியும் தரமாட்டோம்.. நாங்கள் செய்வதையும் கொச்சைப்படுத்தி பேசினால் அது வரும் தேர்தலில் நல்ல பதிலை தரும்.
10 வருடங்கள் பாஜக என்ன செய்தது என சொல்வதற்கு பிரதமர் மோடியிடம் எதுவும் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்று கூறுகிறார். ராமர் கோயிலை இடித்ததே மோடிதான். அயோத்தியை சுற்றியுள்ள 30 சிறு சிறு கோயில்களை அவர் இடித்துள்ளாரா இல்லையா?இதனைப் பார்த்தால் படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர் கோயில் என்ற பழமொழி மோடிக்குதான் பொருந்தும். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய தலைவராக உயர்த்த வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அவ்வாறு பேசி வருகிறார். ஏழை மக்களைப் பற்றி பிரதமர் மோடிக்கு தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் அம்பானியும், அதானியும்தான்” என்றும் விமர்சனம் செய்தார்.