முல்லை பெரியாறு அணையை இடிக்க கேரளா முயற்சி: ஓபிஎஸ் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென் தமிழக மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையை கட்டிக் கொள்வதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டினை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வு வரம்புகளை நிர்ணயம் செய்யுமாறு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தை கேரள அரசு கேட்டுள்ளது.

அதனடிப்படையில் கேரள அரசின் கருத்துரு சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இந்தக் கருத்துரு வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவினால் மே 28-ம் தேதி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய அணையை இடிக்கவும், புதிய அணையை கட்டவும் மத்தியஅரசை அணுகியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

கேரள அரசின் இதுபோன்ற நடவடிக்கை என்பது முல்லைப் பெரியாறு அணையை ஒட்டியுள்ள தமிழகத்தின் பல மாவட்டங்களை பாலைவனமாக்கும் செயலாகும். கேரள அரசின் நடவடிக்கை ஜனவரி மாதமே திமுக அரசுக்கு தெரியவந்தும், மக்களவை தேர்தலை முன்னிட்டு மறைக்கப்பட்டதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக இதை செய்துவிட்டு, தற்போது மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் செயலாகும். இந்தக் கடிதத்தை ஜனவரி மாதமே எழுதியிருந்தால் சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்கே இப்பிரச்சினை சென்றிருக்காது. கேரள அரசின் முயற்சியை இனிமேலாவது முதல்வர் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறிஉள்ளார்.