கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவரை கஞ்சா வழக்கில் தேனி மாவட்டம் பிசிபட்டி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சங்கர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி செங்கமல செல்வன் முன்பு இன்று (மே.27) விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்தாததால், அவர்களையும், அவர்களை அனுப்பியது யார் என்பதையும் கண்டறிய சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பி இருக்கிறார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.