தென் தமிழகத்தில் கூலி படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

தென்தமிழக கூலிப்படைகளை தீவிரவாதத்தை போல என்ஐஏ (NIA) மூலம் ஒடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது:-

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்று சொன்னால் அந்த நாடு முழு அமைதியோடு இருக்க வேண்டும். அமைதியில்லாத இல்லாத எந்த பகுதியிலும் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும் நடைபெறாது. தென் தமிழகத்தில் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் பல்வேறு விதமான ஜாதிய மோதல்கள், மத மோதல்கள், இன மோதல்கள் நிலவியதன் காரணமாக தொழில் ரீதியாக வணிக ரீதியாக கல்வி ரீதியாக மிகப் பெரிய அளவிற்கு பின்னடைவு ஏற்பட்டு வேலை இல்லாமல் இளைஞர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் பெற்றோரையும் உற்றாரையும் விட்டுவிட்டு பிற பகுதிகளுக்கு இடம் பெயர கூடிய அவநிலை பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.

தென் தமிழகத்தை மையமாக வைத்து தமிழகத்தில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பக் கூடிய ஒவ்வொருவரும் அங்கே முதலில் அமைதி திரும்ப வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். 1996ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரம் சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாக தென் தமிழகத்தில் தொடர் கலவரங்கள் நடைபெற்று வந்தன. தொடர்ச்சியாக சமுதாய நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்ற அடிப்படையில் நாம் உள்ளும் புறமும் எடுத்த முயற்சியால் பெருமளவுக்கு சமுதாய மோதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இருந்தாலும் ஆங்காங்கே பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ வேறு பல்வேறு காரணங்களாலோ கொலை செய்யப்பட கூடிய அவல நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதுவும் ஒரு விதத்தில் அமைதியை சீர்குலைக்கக் கூடிய நடவடிக்கை என்ற காரணத்தால் இதை நாம் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே பார்க்கக் கூடிய பார்வையிலிருந்து சமூக ஒழுக்கம், சமூக கட்டுப்பாடு, சமூக சீரழிவு என்ற நோக்கத்துடன் இந்த விஷயத்தை அணுக வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு நாம் வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

ஒரு புள்ளி விவரத்தின்படி அண்மைக்காலத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட படுகொலைகள், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியை மையமாக வைத்து நடந்துள்ளது என்று சொன்னால் எந்த அளவிற்கு அந்த பூமி அமைதியற்ற நிலைமையில் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அது எதற்காக வேண்டுமானாலும் நடக்கட்டும், அதாவது ஜாதி ரீதியிலோ, குடும்பத் தகராறோ, கொடுக்கல் வாங்கலோ எதுவாக இருந்தாலும் 4 மாதங்களில் 400 படுகொலைகள் நடப்பது எந்தவகையில் சரியாக இருக்க முடியும். அங்கு எப்படி அமைதி வரும். உப்பு சப்பில்லாத சம்பவத்திற்கு கூட கொலை செய்ய வேண்டும் என போனால் அந்த சமூகத்தில் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறதா, அங்கே தொழிற்சாலைகள், நல்ல கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் வருமா.

தற்போது தென் தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் நிலை கொண்டிருக்கிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் இறந்துள்ளார். அவருடையது தற்கொலையா கொலையா என்பது கூட தெரியவில்லை. இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வந்த நிலையில் நெல்லை தீபக் ராஜா, பட்டபகலில் கூலி படையினரால் கொல்லப்பட்டுள்ளார். இது ஜாதி ரீதியிலான படுகொலை இல்லை என காவல் துறை சொல்கிறது. இது தொடர்பாக நிறைய பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரை கொல்ல கூலிப் படையினரை ஏவியவர் யார்? அந்த கொலையாளிக்கு இத்தனை லட்சம் ரூபாயை வாரி வழங்கியவர் யார்? இதன் பின்னணியை காவல் துறையினர் கண்டறிய வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.