மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து பெறும் நிறுவனங்கள் மீது கூடுதலாக 34 காசுகள் மேல்வரி விதிப்பதை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்ற அடிப்படையில் ஓர் அரசு செயல்படுமேயானால், உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் அரசாங்கத்திற்கான வருவாய் பெருகி நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் தொழில் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சீரழிந்துக் கொண்டிருக்கின்றது.
‘தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்போம்’ என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் நிறுவனங்களை நசுக்கும் பணியை செய்து வருகிறது. மின் கட்டண உயர்வு, நிலைக் கட்டண உயர்வு, உச்ச நேர மின் கட்டணம், மேற்கூரை சூரியசக்திக்கான மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி, தொழிலையே மேற்கொள்ள முடியாத அளவுக்கு தொழில் முனைவோரையும், தொழிலாளர்களையும் வஞ்சித்து வருகின்ற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் பெற்றுவரும் தொழில் துறையினருக்கு, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 34 காசு மேல்வரி (சர்சார்ஜ்) விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது தொழில் துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் உயரழுத்தப் பிரிவில் இடம் பெறும் தொழிற்சாலைகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திடமிருந்து மட்டுமல்லாமல், வெளிச் சந்தையிலிருந்தும் மின்சாரத்தை பெற்றுக் கொள்ள ஏற்கெனவே வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தை மின்சாரத்தை எடுத்துவர தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வழித்தடம் பயன்படுத்தப்படுவதால், அதற்கான கட்டணத்தை தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதன்படி, யூனிட் ஒன்றிற்கு ஒரு ரூபாய் 96 காசுகள் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஒரு யூனிட்டிற்கு 34 காசுகள் மேல் வரி வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரியுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.
ஏற்கெனவே ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. அரசின் மேல் வரி நடவடிக்கை என்பது தொழில் துறையை நசுக்குவதற்குச் சமம். இதுதான் தொழில் துறையை நலிவிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கையா? ஒருவேளை வாக்குறுதிக்கு முரணாக செயல்படுவதுதான் ‘திராவிட மாடல்’ போலும். இதனை தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்துமேயானால், தொழில் துறை நலிந்துவிடுவது மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கும் வேலை பறிபோகும் சூழ்நிலை உருவாகும். இது தவிர, அரசாங்கத்தின் வருமானமும் குறையக்கூடும்.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தொழில் துறையினரின் நலனையும், தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து பெறும் நிறுவனங்கள் மீது கூடுதலாக 34 காசுகள் மேல்வரி விதிப்பதை கைவிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.