முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதி வழங்க கூடாது: கே.பாலகிருஷ்ணன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. முல்லைப் பெரியாற்றில் புதியஅணை கட்டவேண்டுமானால் கேரளம், தமிழ்நாடு ஆகிய 2 மாநில அரசுகளின் ஒருமித்த முடிவுக்கு பின்னரே கட்ட முடியும் என குறிப்பிட்டதோடு தமிழ்நாட்டின் மீது புதிய அணையை கேரள அரசு திணிக்க முடியாது என கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு கேரள அரசு புதிய அணைக் கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்தபோது தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கை மேற்கொண்டாலும் அதற்கு உச்ச நீதிமன்றத்தினுடைய அனுமதி தேவை என தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் மீண்டும் கேரள அரசின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு 28.5.2024(இன்று) அன்று நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பிட்டுக்குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானதாகும். எனவே, கேரள அரசும், மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவும் இந்தநடவடிக்கைகளை கைவிடவேண்டும்.

இதேபோல், சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியையும் தமிழ்நாடு அரசு அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதிபெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும். அதுவரை இப்பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.